Monday, December 30, 2013

பூமிப்பெண்ணின் காதல்..

இருளோடு பிரிந்திருந்த 
கதிரவக் காதலனின்
முதல் முதல் தீண்டலில் 
அவன் கதிர்க் கரம் சேர்ந்து 
மார்புச் சூட்டில் முகம் புதைத்து
தினம் பனித்துளி கண்ணீர் சிந்துகிறாள்
பூமிப்பெண்!

Saturday, May 1, 2010

ஊமை மொழி

தாய் மொழியும் பேசியதில்லை...
தாய்க்கும் என் மொழி புரிந்ததில்லை!!
குழம்பித்தான் போனேன் - நான் ஊமையோ என்று!!
உன் குரல் கேட்டதும் தான் உணர்ந்தேன் -
என் மொழி உனக்கே உனக்கானது என்று!!

Wednesday, April 22, 2009

போதும்...

வட்ட முழு நிலவு தேவையில்லை -
உன் எழில் முகம் காண...
அமாவாசை காரிருளே போதும்!!

Tuesday, March 10, 2009

எங்கே??

நிலவொளியினின்று நிலத்தில் இறங்கிய
பாதம் சென்ற திசை தேடி - மனம்
திசை மாறிப் போனதென்ன!!

கடலலையில் அவன் நினைவும்
கலந்தே தான் அடிக்கின்றதோ??

இளங்காற்றின் தீண்டலிலே அவன்
ஸ்பரிசமும் நிறைகின்றதோ??

பூக்களின் இதழ் விரிகையிலே
அவன் புன்னகையே பூக்கின்றதோ??

நீரோடை சலசலப்போ - என்
மன்னவனின் பேச்சொலியோ??

கண்ணாடியில் என் பிம்பம்
அவனுருவாய் ஆனதென்ன??

கேள்விகளுக்கு விடை தேடி - என்
உயிர் பறந்து போனதெங்கே??

விடை கொண்டு சேர்த்ததோ
என்னவனின் உயிரன்றோ!!!

Monday, December 29, 2008

எதற்கு???

கடற்கரை மணலில் உன் கால் தடம்
என் நினைவினில் ஏனோ நிலைத்திடும்...
நீ குப்பையென கசக்கிய தாள்கள்
உன் ஞாபகமாய் என்றும் நின்றிடும்...
மை தீர்ந்த பேனா நீ தூக்கி எறிய
அது என் செல்வமாய் ஏனோ மாறிட...
உனக்கு தேவை நீங்கிய குப்பைகள் எல்லாம்...
ஏனோ என் காதல் கோபுரத்தின் கலசங்களாய்!!!
உன் சிறு ஓரப் பார்வை...
அந்த மௌனப் புன்னகை...
ஒற்றைச் சொற்கள்...
அனைத்தும் என் பொக்கிஷமாய்!!!
சின்னச் சின்னதாய் உன் சின்னங்கள்...
சேமிக்கிறேன் என் நெஞ்சில்...
உன்னிடம் மொழியத்தான் வழியில்லை...
என் நாவில் ஏனோ மொழியில்லை...
பெண் மனம் புரியாதா உனக்கு??
இன்னும் மௌனம் நம்மிடையில் எதற்கு?

Sunday, September 7, 2008

மறதி

காதலை உறுதி செய்த
காதலர் தினத்தை மறக்கவில்லை...
"கடலையோடு இதையும் போடுங்கள்!"
என்று சொன்ன சுண்டல் பையனையும் மறக்கவில்லை...
"இப்பவாவது கிளம்புங்களேன்!" என்று
கெஞ்சிய பூங்கா காவலாளியை மறக்கவில்லை...
"மனசுக்கு பிடிச்சவளுக்கு பிடிச்ச
மல்லிப்பூ வாங்கி குடு சார்!"
என்று சிரித்த பூக்காரம்மாவையும் மறக்கவில்லை...
ஆனால் காதலித்து கரம் பிடித்த இருவரும்
திருமணத்தின் பின் காதலைத் தான் ஏனோ மறந்து விடுகிறார்கள்!!!

உறக்கம்

ஆயிரம் இரவுகள் வந்தாலும்
நீ இன்றி உறக்கம் மட்டும் வருவதில்லை!!!
அருகில் நீ இருந்தாலும் - என்
இதயம் ஏனோ உறங்குவதில்லை!!!

Thursday, August 21, 2008

ஏனோ!!

நீ இன்றி நிழலும் நிற்கவில்லை
நீ இன்றி நிலமும் நிலைக்கவில்லை
பகலும் தினம் விடியவில்லை
இரவோ என்றும் முடிவதில்லை
உறக்கம் கண்ணில் பிறக்கவில்லை
தயக்கம் ஏனோ தடுக்கவில்லை
இயக்கம் எதிலும் நடக்கவில்லை
உணவும் ஏனோ இறங்கவில்லை
மனமோ எங்கும் லயிக்கவில்லை
இவை எதுவும் ஏனோ உனக்குப் புரிவதில்லை!!
ஆள நீ வந்துவிட்டால் என்னை...
அடி பணிந்து அடங்கிடுமே இந்த பெண்மை!!!

மடல்

மடல் எழுதிட உனக்கு....
மனம் துடிக்குது எனக்கு....
எண்ணம் பல கோடி தோன்ற....
எழுத்துகள் ஏனோ வாராது நீங்க....
கசங்கிய தாள்கள் மட்டுமே மிச்சமாக....
உன்னிடம் கொடுத்திட என்னிடம் இருக்க....
பெற்றுக் கொள்வாயா அதை??
புரிந்து கொள்வாயா பெண் மனதை??

Sunday, August 17, 2008

என்று தணியுமிந்த சுதந்திர தாகம்??

விலங்கிட்ட கையோடு விலங்காய் வாழ்ந்த நிலை மாறி
சுதந்திர சுவாசத்தை உயிர் மூச்சாய் உள்ளிழுத்த நொடி இது!!

அடி மேல் அடி வைத்துச் சிகரம் தொட்ட விநாடி
பட்ட காயமெல்லாம் நினைவுச் சின்னங்களாய் மட்டும்!


சிந்திய கண்ணீரும் குருதியும் செந்நீராய்
சுதந்திர பயிருக்குச் சேர்ந்ததால் நேர்ந்ததிது!


பல்லுயிரும் பல நல்லுயிரும் ஈந்து
நாம் விடும் சுவாசமல்லவா? உயிரின் நேசமல்லவா?


யுகங்களாக மிதி பட்ட நெஞ்சமெல்லாம்
வெகுண்டெழுந்து வான் முட்ட நிலைத்து நின்ற
சீரிய சத்திய சரித்திரம் இது!


அஞ்சா நெஞ்சோடும் அணையா வேட்கையோடும்
போராடிய உத்தமர்கள் நமக்களித்த வரமன்றோ இது!


வெட்ட வெட்ட வளர்ந்த நம் சுதந்திரச் சிறகினை
விரித்துப் பறந்து திரிந்த வானம் - அதில்

எதிரொலிக்கின்றது நம் முன்னோர்கள் -
போராளிகளின் ஓங்கிய குரல்கள்!


குரல்கள் ஒலிப்பது "வந்தே மாதரம்!!" மட்டுமல்ல......
"விழித்தெழு மனிதா !!" என்றும் தான் !!!

எங்கோ ஓர் மூலையினின்றும் ஓர் அழுகுரல் -
"குழந்தாய்!! காப்பாற்று !!!"

அன்னியரின் அடிமை விலங்கு நீங்கிய பின்னும்
பற்பல விலங்குகள் தாயின் கரங்களில் .....

சிரத்தில் பாரமாய் பல முள் கிரீடங்கள் !!!
நன்னீரையும் செந்நீரையும் கண்ணீராய் வடிக்கிறாள் அன்னை!!

கடமைகள் அழைக்கின்றன!! துயில் கொண்டது போதும்!!!
விழித்தெழு!!! உன்னுள் உறங்கும் இந்தியனுக்கு உயிர் கொடு!!!

வாராய்!! எண்ணங்கள் முயற்சிகள் ஒன்று சேர்ப்போம்!!!
அகிலத்தில் நம் தாயின் புகழினை, பெருமையினை உயிர்ப்பிப்போம்!!!

தாயே!! நீவிர் வாழ்க!!!
நின் புகழ் ஓங்குக!!!

இப்படிக்கு.....
தாயின் துயர் கண்டு மனம் வாடும் மகள்!!!

Monday, August 4, 2008

ஓவியம்

ஓவியமோ!! என்று எண்ணி
என் கண்கள் உன்னை உற்று நோக்க....
உன்னைக் கண்டதால் என்
கண்ணே ஓவியம் ஆனதென்ன!!!!

Thursday, July 24, 2008

ஒளிவிளக்கே வாருமய்யா!!!

ஆசை வச்ச மாமன் - அவன்
ஆழியில மீன் பிடிக்க
தோள் வலிக்க துடுப்பு பிடிச்சு
தொலை தூரம் போனானே....
மாமன் உசுரு பிழைச்சு வர
மனசெல்லாம் பதைபதைக்க
போனவன் உயிர் மீண்டு வர
வீட்டு வாசல் முற்றத்திலே
விளக்கேத்தி வச்சேனே... - அது
நின்னு நெலச்சு எரியும் வரை
மாமன் வந்து சேரலியே....
ஏத்தி வச்ச விளக்குத் திரி
கருகித்தான் போனதிங்கே....
போனவனைக் காணலியே.... - எனக்கு
நிலத்தில் நிலை கொள்ளலியே.....

மனங்கவர்ந்த மணவாளா...
மறந்தென்னைப் போனாயோ....
உளங்கவர்ந்த உயிர்நாதா..... - என்
உயிர் பறித்துப் போனாயோ!!!
வாசலிலே நடை நடந்து
தரையுமிங்கே தேய்ந்திட்டதே....
நாளை என் பொழுதென்று
நன்னாளாய் விடிந்திடுமா?
காலை உதயம் நம்
வாழ்வை மீட்டுத் தந்திடுமா??
நான் கொண்ட கவலைகளும்
நொடிப் பொழுதில் விலகிடுமா??
விடை சொல்ல வர வேண்டாம்....
விடையாக வாருமய்யா!!!
வாழ்க்கை நிலைச்சிருக்க....
விளக்கொளியாய் வாருமய்யா!!!
நான் குங்குமம் கொண்டிருக்க.... - என்
குலவிளக்கே வாருமய்யா!!!
என் வாழ்வின் ஒளிவிளக்கே.....
குறை தீர்க்க வாருமய்யா!!!
உயிர் விடக் காத்திருக்கேன்.....
மீட்டெடுக்க வாருமய்யா!!!

Wednesday, April 16, 2008

ஏன் இந்த மாற்றம்???

அமைதி என்றும் இனித்ததில்லை...
உன் மௌனம் ஏனோ இனிக்கிறதே!
புயல் என்றும் பிடித்ததில்லை...
உன் கோபங்கள் ஏனோ பிடிக்கிறதே!
மனித மனம் என்றும் புரிந்ததில்லை...
உன் எண்ணம் மட்டும் புரிகிறதே!
நிலவை என்றும் ரசித்ததில்லை...
உன் முகம் தனித்தே தெரிகிறதே!
அலைகடல் நினைவில் நிலைத்ததில்லை...
உன் பேச்சு மட்டும் நிலைக்கிறதே!
துணையை என்றும் விழைந்ததில்லை...
உன் துணை மனம் ஏனோ தேடிடுதே!
மரணம் என்றும் மறுத்ததில்லை...
உன் மனம் என் திசையைத் திருப்பியதே!
வாழ்வை என்றும் விரும்பியதில்லை...
உன் வரவு என்னை மாற்றியதே!
என்னை என்றும் உணர்ந்ததில்லை...
உன் காதல் என்னை உணர்த்தியதே!!!

வழி மேல் விழி வைத்து...

என் நெற்றிச் சிந்துரம் இடுகையிலே
உன் நினைவுகள் நெஞ்சில் நிறையுதடா!
நீ இட்ட குங்குமம் நிலைப்பதுவே
நித்தம் மனம் உருகி வேண்டுதடா!
கண்ணில் நீர் வழிந்தோட
தினம் உன் வரவை எண்ணியே ஏங்குதடா!
தாயும் தாரமும் தவித்திருக்க,
தாயகம் காக்க புறப்பட்ட உன்னை
வீர பத்தினியாக போர் முனைக்கு
அனுப்பிட மட்டுமே மனம் துணிந்ததடா!
நின்னை நீங்கி நிற்கும் வாழ்வில் ஆசையில்லையடா!
நின்னை, என் உயிரைத் திரும்பப் பெறுவேனா?
நினைக்கையில் மனம் கதறி குமுருதடா!
வாராயோ! என் கணவா!! விரைவில் வந்து
என் மனக் குறையைத் தீராயோ....
விழிகளை வழி மேல் வைத்திருப்பேன்....
நீ வரும் நொடிக்காகக் காத்திருப்பேன்....

Sunday, April 6, 2008

விடியலே வா!!!

எந்தன் எண்ணத்தின் பிம்பமே! வா...
என் அருமை இளமகளே! வா...
உன்னை வரவேற்க - உன்
அன்னை அருமையாகக் காத்திருக்கிறேன்!
"பெண்ணாகப் பிறந்தாயே.. சீ! சீ!" என்பர்...
துவளாதே! சாதிக்கப் பிறப்பவள் நீ!
"அடுப்பூதப் பிறந்தாய் நீ!" என்பர்...
நடுங்காதே! நாளைய நம்பிக்கை நீ!
குரலெடுக்க உரிமையில்லை...
உரிமைகள் அளிக்க ஓர் உலகுமில்லை...
தயங்காதே... தடைகளைத் தகர்த்தெறி...
தலையில் குட்டி, உயராது தடுக்க...
புறப்படும் பல படைகள்!!!
பகைவர்கள் பலர் படையெடுத்தாலும்
நம்பிக்கைத் தர நானிருக்கிறேன்....
கண்ணில் கனவுகள் பல...
நெஞ்சின் வேதனைகள் பல...
நினைவின் கருநிழல்கள் பல...
கருவாய் அல்ல - உன்னைக்
கனவாய்ச் சுமக்கிறேன்....
உன் வரவில்...
என் லட்சியங்களின் விடியல்!!!
லட்சியங்கள் நிறைவேற்ற....
நம்பிக்கை ஒளியேற்ற....
எதிர்காலம் தழைக்க....
பெண் சமூகம் செழிக்க....
என் கிழக்கின் உதயமே வா!!!
என் நம்பிக்கைச் சுடரே வா!!!
என் வாழ்வின் விடியலே வா!!!

Saturday, March 8, 2008

விருப்பமில்லை...

உன் பிரிவால் நான் அழவில்லை...
என் கண்ணீர் வழியாக
என் காதல் கரைவதில்
எனக்கு விருப்பமில்லை!!

அதனால்!!

காலம் காயத்தை ஆற்றும் என்பார்கள்...
ஆதலால் நான் கடிகாரம் கட்டுவதில்லை!!
காயம் ஆறினால் என் காதலும் ஆறிவிடுமே.... அதனால்!!

Wednesday, February 13, 2008

நீ.. நான்.. அவள்..

நீ பூமி என்று எண்ணி
நிலவாய் உன்னைச் சுற்றி வந்தேன்..
நீ சுற்ற ஒரு சூரியன் இருந்தது
எனக்கு தெரியாமல் போனதே!!!

Sunday, January 20, 2008

கெஞ்சல்

நீ கொடுத்த ரோஜா கண்டு
மனம் உன் பேரில் இரங்கவில்லை...
உன் விழியின் கெஞ்சலில் அன்றோ இரங்கியது....

ஏனோ

ஒற்றைப் பார்வையில்
உயிரைக் குடித்தவன் மேல்
கோபம் கொள்ளாது
பேதை மனம்
ஏனோ கசிந்துருகியது...
அவன் ஒற்றன் அல்லவே....
என் உற்றவன் ஆனதால்!!!

Monday, January 14, 2008

ஏன்??

"மேகத்தின் பின் ஒளியும்
வெண்ணிலா போல் இருக்கிறாய்!" என்றாய் -
அந்த வெண்ணிலவில் தெரிவது
உன் முகம் தானென்று
ஏன் உனக்குப் புரியவில்லை?

கள்வன்

ஆயுதம் ஏந்தாமல்
முகமுடி அணியாமல்
மிரட்டல்கள் மொழியாமல்
என் நெஞ்சைக்
கொள்ளையடித்த
கள்வன் நீயே!!

அன்றும் இன்றும்

அன்று...
மை ஊற்றி எழுதினேன் தன்னால்...
இன்று...
காதல் ஊற்றி எழுதுகிறேன் உன்னால்!!!

நினைவு

தாய் தந்தையின் விரல் பிடித்து
நடை பழகிய நாட்கள் நினைவில் இல்லை...
ஆனால்...
உன் விரல் பிடிக்க வேண்டும் என்பதற்காக
கடற்கரை மணலில் கால்கள் புதைபட
விழுவது போல் நடித்த நொடி மட்டும்
நெஞ்சில் ஏனோ நீங்காத நினைவாக
அலையடித்துக் கொண்டே இருக்கிறது....

பிடிக்கவில்லை...

"உன் கூந்தலில் அந்த ஒற்றை ரோஜா
அழகாய் இருக்கிறது" என்று
நீ கூறிய நாள் முதல்
நான் பூக்கள் சூடுவதையே விட்டு விட்டேன்....
என்னை விட என் பூக்கள்
உன் கவனத்தை ஈர்ப்பது
எனக்குப் பிடிக்கவில்லை!!!