Thursday, July 24, 2008

ஒளிவிளக்கே வாருமய்யா!!!

ஆசை வச்ச மாமன் - அவன்
ஆழியில மீன் பிடிக்க
தோள் வலிக்க துடுப்பு பிடிச்சு
தொலை தூரம் போனானே....
மாமன் உசுரு பிழைச்சு வர
மனசெல்லாம் பதைபதைக்க
போனவன் உயிர் மீண்டு வர
வீட்டு வாசல் முற்றத்திலே
விளக்கேத்தி வச்சேனே... - அது
நின்னு நெலச்சு எரியும் வரை
மாமன் வந்து சேரலியே....
ஏத்தி வச்ச விளக்குத் திரி
கருகித்தான் போனதிங்கே....
போனவனைக் காணலியே.... - எனக்கு
நிலத்தில் நிலை கொள்ளலியே.....

மனங்கவர்ந்த மணவாளா...
மறந்தென்னைப் போனாயோ....
உளங்கவர்ந்த உயிர்நாதா..... - என்
உயிர் பறித்துப் போனாயோ!!!
வாசலிலே நடை நடந்து
தரையுமிங்கே தேய்ந்திட்டதே....
நாளை என் பொழுதென்று
நன்னாளாய் விடிந்திடுமா?
காலை உதயம் நம்
வாழ்வை மீட்டுத் தந்திடுமா??
நான் கொண்ட கவலைகளும்
நொடிப் பொழுதில் விலகிடுமா??
விடை சொல்ல வர வேண்டாம்....
விடையாக வாருமய்யா!!!
வாழ்க்கை நிலைச்சிருக்க....
விளக்கொளியாய் வாருமய்யா!!!
நான் குங்குமம் கொண்டிருக்க.... - என்
குலவிளக்கே வாருமய்யா!!!
என் வாழ்வின் ஒளிவிளக்கே.....
குறை தீர்க்க வாருமய்யா!!!
உயிர் விடக் காத்திருக்கேன்.....
மீட்டெடுக்க வாருமய்யா!!!