Monday, December 31, 2007

பூவின் கண்ணீர்


புன்னகை பூக்கும் பூக்களைக் கொண்டு
மாலைகள் ஆக்கிடுவார் - அவர்தம்
மார்பினில் சூடிடுவார்.... அந்தப்
பூக்களின் கண்ணீர் தேனாய்ச் சொரிவதை
எவர்தான் நோக்கிடுவார்???

Thursday, December 27, 2007

ஒரு துளி கண்ணீர்

மடை திறந்த வெள்ளமென
பெருகிய எண்ணங்கள்
தேக்கங்களாய் நாவில் தங்க...
தவறிய வார்த்தைகள் கூறாத காதலை
அவள் கண்ணின் ஒரம் வழிந்த
ஒரு துளி கண்ணீர் உணர்த்தியதே!!

பார்வைகள்


வான் பார்த்து காத்து நின்ற உழவனுக்கு
சிந்தும் மழைத்துளி லாபம்!
உலகமறியா மழலை முகத்திற்கு
கப்பல் விட்டு மகிழ்ந்தாட ஒரு துணை!
காய்ந்து நிற்கின்ற பயிருக்கு
பூமி சேர்கின்ற மழைத்துளி உயிர்த்துளி!
பணம் தேடி அலையும் மனிதருக்கு
வான தேவனின் கொடை ஒரு தடை!

ஒற்றை நிகழ்வில்
எத்தனை விதமான பார்வைகள்!!
பார்வைகள் மாறிடினும்
மழையின் பயணம் மட்டும்
மாறுவதில்லை.... முடிவதில்லை!!!

ஒளியாதே!!


மேகத்தின் பின் ஒளியாதே...
ஆதவனே.. என் காதலனே!!
ஒரு காற்றடித்தால்
உன் மேகத்திரை கலைந்து விடும்!!!

மீனம்


மீன ராசியிலா பிறந்தாய்.. நீ?
உன் விழி தூண்டிலாகி
என்னை மீனாய் மாற்றியதே!!

என் கடவுள்

ஆட்டி வைப்பவன் கடவுள் என்றால்
என் உயிருக்கு நீயே கடவுள்!!

நீ.... நான்....

நீ நடந்து சென்ற பாதையில்...
காலடித் தடமாய் நான்...
நீ தொட்டு விளையாடிய அலைகடலில்...
அலைக் கரங்களாய் நான்...
நீ வெயிலில் நடந்து செல்லுகையில்...
மர நிழலாய் நான்...
நீ துயிலுறங்க உனைத் தாலாட்டும்...
மெல்லிய இசையாய் நான்...
நீ பசியாற உணவளிக்கும்...
செடி கொடியாய் நான்...
நீ குளிர் காய இதம் தரும்...
தீப்பிழம்பாய் நான்...
உன் வாழ்வில் ஒரு பொருளாய் நான்!!
என் வாழ்வின் பொருளே நீ!!!!

அடிமை சாஸனம்


இரு இதயங்கள்...
இரு ஜோடிக் கண்கள்...
பரிமாறிக் கொள்ளும்
அடிமை சாஸனம்...
காதல்!!!

கடன்

கொடுத்ததைத் திரும்பப் பெறும் வழக்கம்
எனக்கு இல்லை..
இதை அறிந்து தானோ என்னவோ...
என் உயிரைப் பறித்துச் சென்றாய்...
என் உயிர் இனி எனக்குத் தேவையில்லை...
உன்னால் நான் இன்று முதல் அமரன்!!!

கைதி

இன்று முதல் நீ ஆயுள் கைதி...
என் ஆயுள் வரையில் என் மனச்சிறையில்!!
காரணம், உன் கூர்விழியால்
என்னைக் குத்திக் கொன்றாயே... அதற்காக!!!

சுதந்திரம்

மதம் என்னும் சங்கிலியால்
பிணைக்கப்பட்டு
உலா வருகிறான் ---
சுதந்திர இந்தியாவின் மனிதன்!!!

சுதந்திரம்


சுதந்திர தினத்தன்று
வெளிவிடப் படுவதற்காக
இரு வாரங்களாக
சிறு கூண்டில்
திணறும் புறாக்கள்!!!

மாறுபாடு


தன் வீட்டு ஆடு சுமை இறக்கியதும்
கொண்டாடினான் இடையன் ---
"என் வீட்டு ஸ்ரீதேவியே!!
பெண் குட்டி ஈன்றாயே!" என்று!!!

இடையன் மனைவி சுமையிறக்கினாள்....
சொன்னான் இடையன் ---
"சீ! பெண்ணா!!" என்று!!!

பாவம்


நிலவுக்குத் தெரியுமா?
தான் வளர்ந்தது...
தேய்வதற்குத் தான் என்று!!!

பாவம்


மறைவோம் என்று தெரிந்தும்...
அத்திசையை நோக்கிச் செல்லும்...
கதிரவன்!!!

சிறை


சிறையின் கதவு திரை ஆனது...
சிறையின் கம்பிகள் மெலிதானது...
விழுந்து விட்டேன் உன் விழிச் சிறையில்!!!

மறுபிறவி


மறுபிறவி என்று ஒன்று இருந்தால்....
நான் நதியாய் பிறப்பேன்..
மேடு பள்ளங்களில் ஓய்வின்றி பாய்வேன்...
தடைகளைத் தகர்த்து எறிவேன்...
வழி எங்கும் உயிர்த்திருப்பேன்...
பல் வகை உயிரும் ஜனிக்க உதவுவேன்...
வற்றாத ஜீவ நதியாய்...
காலமெல்லாம் கரை புரண்டு...
என்றென்றும் நின்று நிலைத்திருப்பேன்!!!

விடியல்விடியட்டும் பொழுது என்று
கண் மூடிக் காத்திருக்காதே!!
கண் விழித்துப் பார்!!
விடிந்திருக்கும்... பொழுதும்... வாழ்க்கையும்!!!

சிலை
உன் கண்கள் இரண்டும் உளியா?
உன் பார்வை பட்டதும்
நான் சிலையாகிப் போனேனே!!