தாய் தந்தையின் விரல் பிடித்து நடை பழகிய நாட்கள் நினைவில் இல்லை... ஆனால்... உன் விரல் பிடிக்க வேண்டும் என்பதற்காக கடற்கரை மணலில் கால்கள் புதைபட விழுவது போல் நடித்த நொடி மட்டும் நெஞ்சில் ஏனோ நீங்காத நினைவாக அலையடித்துக் கொண்டே இருக்கிறது....
"உன் கூந்தலில் அந்த ஒற்றை ரோஜா அழகாய் இருக்கிறது" என்று நீ கூறிய நாள் முதல் நான் பூக்கள் சூடுவதையே விட்டு விட்டேன்.... என்னை விட என் பூக்கள் உன் கவனத்தை ஈர்ப்பது எனக்குப் பிடிக்கவில்லை!!!
அகன்று விரிந்த வானாய் நீ இருக்க.. அதில் நிலவாய் மின்ன எனக்கு ஆசையில்லை... தூரத்தில் நின்னை நீங்கி நின்றாலும்.. நின்னையே எண்ணும் பூமியாக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன்!!
அருகில் நீ இல்லாததை எண்ணி கண்ணில் நீர் தளும்புகிறது.. என் கண்ணின் பாவையாய் நீ இருக்க, நீர் வழிந்தால் உன் சுவாசம் திணறுமோ? என்றெண்ணியே என் கண்ணீரை உள்ளடக்குகிறேன்!!!
வானவர்கள் பூமழை தூவவில்லை; மின்னல் கீற்று தோன்றவில்லை; நட்சத்திரங்கள் ஜொலிக்கவில்லை; இதய மணி ஒலிக்கவில்லை; ஆயினும்... களவு போன என் இதயம் மட்டும் சொல்கிறது... நீயே என் காதலன் என்று!!!
கலைந்து கிடந்தது... மேகம் கொண்ட வானம் மட்டுமல்ல... என் நினைவும் மனமும் தான்! மேகத்தினின்றும் சிந்திய மழைத்துளி மண்ணைச் சேர்ந்ததோ... சிப்பிக்குள் முத்தாய்ப் போனதோ! என்னுள் விழுந்த நீ மட்டும் நினைவில் நிலைத்து... மனதில் நிறைந்து விட்டாய்!! சிந்திய மழைத்துளி சென்ற இடம் தேடும் மனதுக்கு... தான் தொலைந்து போன இடம் தேட ஏனோ தோன்றவில்லை!!!