Thursday, August 21, 2008

ஏனோ!!

நீ இன்றி நிழலும் நிற்கவில்லை
நீ இன்றி நிலமும் நிலைக்கவில்லை
பகலும் தினம் விடியவில்லை
இரவோ என்றும் முடிவதில்லை
உறக்கம் கண்ணில் பிறக்கவில்லை
தயக்கம் ஏனோ தடுக்கவில்லை
இயக்கம் எதிலும் நடக்கவில்லை
உணவும் ஏனோ இறங்கவில்லை
மனமோ எங்கும் லயிக்கவில்லை
இவை எதுவும் ஏனோ உனக்குப் புரிவதில்லை!!
ஆள நீ வந்துவிட்டால் என்னை...
அடி பணிந்து அடங்கிடுமே இந்த பெண்மை!!!

மடல்

மடல் எழுதிட உனக்கு....
மனம் துடிக்குது எனக்கு....
எண்ணம் பல கோடி தோன்ற....
எழுத்துகள் ஏனோ வாராது நீங்க....
கசங்கிய தாள்கள் மட்டுமே மிச்சமாக....
உன்னிடம் கொடுத்திட என்னிடம் இருக்க....
பெற்றுக் கொள்வாயா அதை??
புரிந்து கொள்வாயா பெண் மனதை??

Sunday, August 17, 2008

என்று தணியுமிந்த சுதந்திர தாகம்??

விலங்கிட்ட கையோடு விலங்காய் வாழ்ந்த நிலை மாறி
சுதந்திர சுவாசத்தை உயிர் மூச்சாய் உள்ளிழுத்த நொடி இது!!

அடி மேல் அடி வைத்துச் சிகரம் தொட்ட விநாடி
பட்ட காயமெல்லாம் நினைவுச் சின்னங்களாய் மட்டும்!


சிந்திய கண்ணீரும் குருதியும் செந்நீராய்
சுதந்திர பயிருக்குச் சேர்ந்ததால் நேர்ந்ததிது!


பல்லுயிரும் பல நல்லுயிரும் ஈந்து
நாம் விடும் சுவாசமல்லவா? உயிரின் நேசமல்லவா?


யுகங்களாக மிதி பட்ட நெஞ்சமெல்லாம்
வெகுண்டெழுந்து வான் முட்ட நிலைத்து நின்ற
சீரிய சத்திய சரித்திரம் இது!


அஞ்சா நெஞ்சோடும் அணையா வேட்கையோடும்
போராடிய உத்தமர்கள் நமக்களித்த வரமன்றோ இது!


வெட்ட வெட்ட வளர்ந்த நம் சுதந்திரச் சிறகினை
விரித்துப் பறந்து திரிந்த வானம் - அதில்

எதிரொலிக்கின்றது நம் முன்னோர்கள் -
போராளிகளின் ஓங்கிய குரல்கள்!


குரல்கள் ஒலிப்பது "வந்தே மாதரம்!!" மட்டுமல்ல......
"விழித்தெழு மனிதா !!" என்றும் தான் !!!

எங்கோ ஓர் மூலையினின்றும் ஓர் அழுகுரல் -
"குழந்தாய்!! காப்பாற்று !!!"

அன்னியரின் அடிமை விலங்கு நீங்கிய பின்னும்
பற்பல விலங்குகள் தாயின் கரங்களில் .....

சிரத்தில் பாரமாய் பல முள் கிரீடங்கள் !!!
நன்னீரையும் செந்நீரையும் கண்ணீராய் வடிக்கிறாள் அன்னை!!

கடமைகள் அழைக்கின்றன!! துயில் கொண்டது போதும்!!!
விழித்தெழு!!! உன்னுள் உறங்கும் இந்தியனுக்கு உயிர் கொடு!!!

வாராய்!! எண்ணங்கள் முயற்சிகள் ஒன்று சேர்ப்போம்!!!
அகிலத்தில் நம் தாயின் புகழினை, பெருமையினை உயிர்ப்பிப்போம்!!!

தாயே!! நீவிர் வாழ்க!!!
நின் புகழ் ஓங்குக!!!

இப்படிக்கு.....
தாயின் துயர் கண்டு மனம் வாடும் மகள்!!!

Monday, August 4, 2008

ஓவியம்

ஓவியமோ!! என்று எண்ணி
என் கண்கள் உன்னை உற்று நோக்க....
உன்னைக் கண்டதால் என்
கண்ணே ஓவியம் ஆனதென்ன!!!!