Wednesday, April 16, 2008

ஏன் இந்த மாற்றம்???

அமைதி என்றும் இனித்ததில்லை...
உன் மௌனம் ஏனோ இனிக்கிறதே!
புயல் என்றும் பிடித்ததில்லை...
உன் கோபங்கள் ஏனோ பிடிக்கிறதே!
மனித மனம் என்றும் புரிந்ததில்லை...
உன் எண்ணம் மட்டும் புரிகிறதே!
நிலவை என்றும் ரசித்ததில்லை...
உன் முகம் தனித்தே தெரிகிறதே!
அலைகடல் நினைவில் நிலைத்ததில்லை...
உன் பேச்சு மட்டும் நிலைக்கிறதே!
துணையை என்றும் விழைந்ததில்லை...
உன் துணை மனம் ஏனோ தேடிடுதே!
மரணம் என்றும் மறுத்ததில்லை...
உன் மனம் என் திசையைத் திருப்பியதே!
வாழ்வை என்றும் விரும்பியதில்லை...
உன் வரவு என்னை மாற்றியதே!
என்னை என்றும் உணர்ந்ததில்லை...
உன் காதல் என்னை உணர்த்தியதே!!!

வழி மேல் விழி வைத்து...

என் நெற்றிச் சிந்துரம் இடுகையிலே
உன் நினைவுகள் நெஞ்சில் நிறையுதடா!
நீ இட்ட குங்குமம் நிலைப்பதுவே
நித்தம் மனம் உருகி வேண்டுதடா!
கண்ணில் நீர் வழிந்தோட
தினம் உன் வரவை எண்ணியே ஏங்குதடா!
தாயும் தாரமும் தவித்திருக்க,
தாயகம் காக்க புறப்பட்ட உன்னை
வீர பத்தினியாக போர் முனைக்கு
அனுப்பிட மட்டுமே மனம் துணிந்ததடா!
நின்னை நீங்கி நிற்கும் வாழ்வில் ஆசையில்லையடா!
நின்னை, என் உயிரைத் திரும்பப் பெறுவேனா?
நினைக்கையில் மனம் கதறி குமுருதடா!
வாராயோ! என் கணவா!! விரைவில் வந்து
என் மனக் குறையைத் தீராயோ....
விழிகளை வழி மேல் வைத்திருப்பேன்....
நீ வரும் நொடிக்காகக் காத்திருப்பேன்....

Sunday, April 6, 2008

விடியலே வா!!!

எந்தன் எண்ணத்தின் பிம்பமே! வா...
என் அருமை இளமகளே! வா...
உன்னை வரவேற்க - உன்
அன்னை அருமையாகக் காத்திருக்கிறேன்!
"பெண்ணாகப் பிறந்தாயே.. சீ! சீ!" என்பர்...
துவளாதே! சாதிக்கப் பிறப்பவள் நீ!
"அடுப்பூதப் பிறந்தாய் நீ!" என்பர்...
நடுங்காதே! நாளைய நம்பிக்கை நீ!
குரலெடுக்க உரிமையில்லை...
உரிமைகள் அளிக்க ஓர் உலகுமில்லை...
தயங்காதே... தடைகளைத் தகர்த்தெறி...
தலையில் குட்டி, உயராது தடுக்க...
புறப்படும் பல படைகள்!!!
பகைவர்கள் பலர் படையெடுத்தாலும்
நம்பிக்கைத் தர நானிருக்கிறேன்....
கண்ணில் கனவுகள் பல...
நெஞ்சின் வேதனைகள் பல...
நினைவின் கருநிழல்கள் பல...
கருவாய் அல்ல - உன்னைக்
கனவாய்ச் சுமக்கிறேன்....
உன் வரவில்...
என் லட்சியங்களின் விடியல்!!!
லட்சியங்கள் நிறைவேற்ற....
நம்பிக்கை ஒளியேற்ற....
எதிர்காலம் தழைக்க....
பெண் சமூகம் செழிக்க....
என் கிழக்கின் உதயமே வா!!!
என் நம்பிக்கைச் சுடரே வா!!!
என் வாழ்வின் விடியலே வா!!!

Saturday, March 8, 2008

விருப்பமில்லை...

உன் பிரிவால் நான் அழவில்லை...
என் கண்ணீர் வழியாக
என் காதல் கரைவதில்
எனக்கு விருப்பமில்லை!!

அதனால்!!

காலம் காயத்தை ஆற்றும் என்பார்கள்...
ஆதலால் நான் கடிகாரம் கட்டுவதில்லை!!
காயம் ஆறினால் என் காதலும் ஆறிவிடுமே.... அதனால்!!

Wednesday, February 13, 2008

நீ.. நான்.. அவள்..

நீ பூமி என்று எண்ணி
நிலவாய் உன்னைச் சுற்றி வந்தேன்..
நீ சுற்ற ஒரு சூரியன் இருந்தது
எனக்கு தெரியாமல் போனதே!!!

Sunday, January 20, 2008

கெஞ்சல்

நீ கொடுத்த ரோஜா கண்டு
மனம் உன் பேரில் இரங்கவில்லை...
உன் விழியின் கெஞ்சலில் அன்றோ இரங்கியது....

ஏனோ

ஒற்றைப் பார்வையில்
உயிரைக் குடித்தவன் மேல்
கோபம் கொள்ளாது
பேதை மனம்
ஏனோ கசிந்துருகியது...
அவன் ஒற்றன் அல்லவே....
என் உற்றவன் ஆனதால்!!!

Monday, January 14, 2008

ஏன்??

"மேகத்தின் பின் ஒளியும்
வெண்ணிலா போல் இருக்கிறாய்!" என்றாய் -
அந்த வெண்ணிலவில் தெரிவது
உன் முகம் தானென்று
ஏன் உனக்குப் புரியவில்லை?

கள்வன்

ஆயுதம் ஏந்தாமல்
முகமுடி அணியாமல்
மிரட்டல்கள் மொழியாமல்
என் நெஞ்சைக்
கொள்ளையடித்த
கள்வன் நீயே!!

அன்றும் இன்றும்

அன்று...
மை ஊற்றி எழுதினேன் தன்னால்...
இன்று...
காதல் ஊற்றி எழுதுகிறேன் உன்னால்!!!

நினைவு

தாய் தந்தையின் விரல் பிடித்து
நடை பழகிய நாட்கள் நினைவில் இல்லை...
ஆனால்...
உன் விரல் பிடிக்க வேண்டும் என்பதற்காக
கடற்கரை மணலில் கால்கள் புதைபட
விழுவது போல் நடித்த நொடி மட்டும்
நெஞ்சில் ஏனோ நீங்காத நினைவாக
அலையடித்துக் கொண்டே இருக்கிறது....

பிடிக்கவில்லை...

"உன் கூந்தலில் அந்த ஒற்றை ரோஜா
அழகாய் இருக்கிறது" என்று
நீ கூறிய நாள் முதல்
நான் பூக்கள் சூடுவதையே விட்டு விட்டேன்....
என்னை விட என் பூக்கள்
உன் கவனத்தை ஈர்ப்பது
எனக்குப் பிடிக்கவில்லை!!!

Tuesday, January 1, 2008

ஆசை

அகன்று விரிந்த வானாய் நீ இருக்க..
அதில் நிலவாய் மின்ன எனக்கு ஆசையில்லை...
தூரத்தில் நின்னை நீங்கி நின்றாலும்..
நின்னையே எண்ணும் பூமியாக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன்!!

கண்ணீர்

அருகில் நீ இல்லாததை எண்ணி
கண்ணில் நீர் தளும்புகிறது..
என் கண்ணின் பாவையாய் நீ இருக்க,
நீர் வழிந்தால் உன் சுவாசம் திணறுமோ?
என்றெண்ணியே என் கண்ணீரை உள்ளடக்குகிறேன்!!!

காத்திருக்கேன்..

ஆத்தோரம் வளர்ந்து நிற்கும்
அந்த ஒத்தை மரத்தடியில்
அச்சாரம் போட்டு வச்சு
அஞ்சாறு மாசமாச்சு

நாளாக நாளாக
நாணல் மட்டும் வளருதய்யா
நித்தம் நித்தம் உன் நினைப்பு
நெஞ்சுக்குள்ள ஏறுதய்யா!!

காலம் கனியட்டும் எனக்
காத்திருந்து காத்திருந்து
நாளெல்லாம் நகருதய்யா
நெஞ்சம் ஏனோ ஏங்குதய்யா

மனையோடு பந்தல் வச்சு
மாலை மாத்தி மேளம் கொட்டி
ஊரறிய உலகறிய உன்
கைப்பிடிக்கக் காத்திருக்கேன்!!

நெஞ்செல்லாம் நெனப்போட,
கண்ணெல்லாம் கனவோட,
மனசெல்லாம் ஆசை வச்சு..
மன்னவனே காத்திருக்கேன்!!

நீயே!!

வானவர்கள் பூமழை தூவவில்லை;
மின்னல் கீற்று தோன்றவில்லை;
நட்சத்திரங்கள் ஜொலிக்கவில்லை;
இதய மணி ஒலிக்கவில்லை;
ஆயினும்...
களவு போன என் இதயம் மட்டும் சொல்கிறது...
நீயே என் காதலன் என்று!!!

எப்படி?

இதயம் வருட வந்த தென்றலுக்கு
எப்படித் தெரியும்?
என் இதயம் என்னிடம் இல்லை என்று!!

ஏனோ தோன்றவில்லை...

கலைந்து கிடந்தது...
மேகம் கொண்ட வானம் மட்டுமல்ல...
என் நினைவும் மனமும் தான்!
மேகத்தினின்றும் சிந்திய மழைத்துளி
மண்ணைச் சேர்ந்ததோ...
சிப்பிக்குள் முத்தாய்ப் போனதோ!
என்னுள் விழுந்த நீ மட்டும்
நினைவில் நிலைத்து...
மனதில் நிறைந்து விட்டாய்!!
சிந்திய மழைத்துளி சென்ற இடம் தேடும் மனதுக்கு...
தான் தொலைந்து போன இடம் தேட ஏனோ தோன்றவில்லை!!!

போதும்

என் உயிரைக் கொல்ல...
கத்தியோ கோடரியோ தேவையில்லை....
உன் கூர் விழிப் பார்வை ஒன்றே போதும்!!

என் உயிரைக் காக்க...
கவசமோ கேடயமோ தேவையில்லை....
உன் விழி மூடும் இமைகளே போதும்!!

Monday, December 31, 2007

பூவின் கண்ணீர்


புன்னகை பூக்கும் பூக்களைக் கொண்டு
மாலைகள் ஆக்கிடுவார் - அவர்தம்
மார்பினில் சூடிடுவார்.... அந்தப்
பூக்களின் கண்ணீர் தேனாய்ச் சொரிவதை
எவர்தான் நோக்கிடுவார்???

Thursday, December 27, 2007

ஒரு துளி கண்ணீர்

மடை திறந்த வெள்ளமென
பெருகிய எண்ணங்கள்
தேக்கங்களாய் நாவில் தங்க...
தவறிய வார்த்தைகள் கூறாத காதலை
அவள் கண்ணின் ஒரம் வழிந்த
ஒரு துளி கண்ணீர் உணர்த்தியதே!!

பார்வைகள்


வான் பார்த்து காத்து நின்ற உழவனுக்கு
சிந்தும் மழைத்துளி லாபம்!
உலகமறியா மழலை முகத்திற்கு
கப்பல் விட்டு மகிழ்ந்தாட ஒரு துணை!
காய்ந்து நிற்கின்ற பயிருக்கு
பூமி சேர்கின்ற மழைத்துளி உயிர்த்துளி!
பணம் தேடி அலையும் மனிதருக்கு
வான தேவனின் கொடை ஒரு தடை!

ஒற்றை நிகழ்வில்
எத்தனை விதமான பார்வைகள்!!
பார்வைகள் மாறிடினும்
மழையின் பயணம் மட்டும்
மாறுவதில்லை.... முடிவதில்லை!!!

ஒளியாதே!!


மேகத்தின் பின் ஒளியாதே...
ஆதவனே.. என் காதலனே!!
ஒரு காற்றடித்தால்
உன் மேகத்திரை கலைந்து விடும்!!!

மீனம்


மீன ராசியிலா பிறந்தாய்.. நீ?
உன் விழி தூண்டிலாகி
என்னை மீனாய் மாற்றியதே!!